அகமதாபாத்: குஜராத் மாநிலம் சவுராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தேவபூமி துவாரகா மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 3 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்து தரைமட்டமானது. கக்வனி பலி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏறத்தாழ 8 மணி நேர தொடர் மீட்பு பணிக்கு பின்னர் 5 பேர் மீட்கப்பட்டனர். மேலும் மூதாட்டி மற்றும் அவரது இரண்டு பேரக் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் கேஷர்பென் கஞ்சாரியா (வயது 65), பிரிதிபென் கஞ்சாரியா (வயது 15), பயல்பென் கஞ்சாரியா (வயது 18) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டட கழிவுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 276 மில்லி மீட்டர் அளவில் மழைப் பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நவ்சாரி, ஜுனாகத், தேவபூமி துவாரகா, கட்ச், டாங்ஸ் மற்றும் தபி ஆகிய மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் புகலிடம் தேடி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
இதையும் படிங்க: "தமிழ்நாடும் இல்லை.. திருக்குறளும் இல்லை.."- நாடாளுமன்றம் முன் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்! - INDIA Bloc MP Protest Parliament