சண்டிகர்: 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, ஹரியானாவில் அக்டோபர் 1ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் நடக்கவுள்ள நாட்களில் தொடர் விடுமுறை வருவதால் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என மாநில பாஜக தலைவர் மோகன் லால் பரோலி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். அது தொடர்பாக மோகன் லால் பரோலி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அக்டோபர் 1-ம் தேதிக்கு முன்பு செப்டம்பர் 28 (சனிக்கிழமை) மற்றும் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு நாட்கள் விடுமுறை ஆகும்.
தேர்தல் காரணமாக அக்டோபர் 1ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 3 அக்ரசென் ஜெயந்தி ஆகும். இவ்வாறு தொடர் விடுமுறை என்பதால், வாக்குப்பதிவு சதவீதம் குறைய பாதிப்புள்ளது. எனவே, தேர்தலை வேறொரு நாளுக்கு நடத்த வேண்டும் என்று மோகன் லால் பரோலி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு; முக்கிய கைதியிடம் உண்மைக் கண்டறியும் சோதனை!