கேரளா: மலையாள மாதங்களுள் மிக பிரசித்தி பெற்ற மாதம் கர்கிடகை. இந்நிலையில், இன்று (ஜூலை 16) முதல் இந்த கர்கிடகை மாதம் தொடங்கிய நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆனையூட்டு' எனப்படும் யானைகளின் விருந்து விழா திருச்சூர் வடக்குநாதன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது.
உணவு உருண்டையும், ஆனை விழாவும்: இந்த விழாவை தந்திரி புளியன்னூர் சங்கரநாராயணன் நம்பூதிரி தலைமையில் அதிகாலை 5 மணிக்கு அஷ்டத்ரவ்ய மகாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதில் பெண் யானைகள் உட்பட 64 யானைகள் கலந்து கொண்டன. இதனைத் தொடர்ந்து, குட்டியானை குருவாயூர் லட்சுமி கோயில் தலைமை வகிக்கும் ஸ்ரீராஜ் நாராயணன், யானைகளுக்கு முதல் அன்னதானம் உருண்டையை வழங்கி, தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
அறுசுவையில் ஆனைகள் விருந்து: பின் விழாவின் நாயகர்களான யானைகளுக்கு 500 கிலோ அரிசி உருண்டை, வெல்லம், மஞ்சள் தூள், அன்னாசி , வெள்ளரி, தர்பூசணி என எட்டு வகையான பழங்களோடு செரிமானத்திற்கான சிறப்பு மருந்தும் வழங்கப்பட்டது. இந்த விருந்தை 60 பேர் கொண்ட குழு தயாரித்த நிலையில், இந்த உணவுகளை தயாரிக்க 12,008 தேங்காய், 2,000 கிலோ வெல்லம், 2,000 கிலோ அரிசி துருவல், 500 கிலோ புடலங்காய், 60 கிலோ எள், 50 கிலோ தேன், கணபதி நாரங்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரித்தனர். காட்டு எலுமிச்சை, கரும்பு மற்றும் பிற சமையல் பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன..
ஊர் கூடி நிகழ்ந்த ஆனையூட்டு: இந்த விழாவில் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 65 யானைகள் பங்கேற்றன. இவ்வாறு பங்கு பெறும் யானைகள் கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினரால் பரிசோதிக்கப்பட்டு, பின் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனுமதி பெறுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விழாவை முன்னிட்டு இன்று கேரள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யானைகளை பார்த்து உற்சாகம் அடைந்தனர்.
இந்த விழாவில் கேரள மாநிலத்தின் வருவாய்த்துறை அமைச்சர் ராஜன், எம்எல்ஏ பாலச்சந்திரன் மற்றும் பாஜக மாநிலச் செயலாளர் நாகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கனமழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்குள் குவிந்த வண்ணம் இருந்தன.
இதையும் படிங்க: கோவையில் ஜெகநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்.. இஸ்கான் அமைப்புடன் மதநல்லிணக்க திருவிழா!