டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஜூலை 23ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் ஆறு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கான வழிவகை செய்யும் பொருட்டு 1934ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விமானச் சட்டத்திற்கு பதிலாக பாரதிய வாயுயன் விதேயக் (Bhartiya Vayuyan Vidheyak) சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கொதிகலன்களின் பாதுகாப்பு குறித்த 1923ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய கொதிகலன் மசோதாவுக்கு பதிலாக புதிய பாய்லர் மசோதா, காபி மற்றும் ரப்பர் உற்பத்தி குறித்த ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டு வளர்ச்சி மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் 6 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாக்களை பட்டியலிடுவது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலான வணிக வழிகாட்டு நெறிமுறைக் குழு ஆலோசனைக் குழு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலான இந்த குழுவில் சுதிப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்), பிபி சவுத்ரி (பாஜக), லவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு (தெலுங்கு தேசம்), நிஷிகாந்த் துபே (பாஜக), கௌரவ் கோகோய் (காங்கிரஸ்), சஞ்சய் ஜெய்ஸ்வால் (பாஜக), திலேஷ்வர் கமைத் (ஐக்கிய ஜனதா தளம்), பர்த்ருஹரி மஹ்தாப் (பாஜக), தயாநிதி மாறன் (திமுக), பைஜயந்த் பாண்டா (பாஜக), அரவிந்த் சாவந்த் (சிவசேனா-உத்தவ் அணி), கொடிக்குனில் சுரேஷ் (காங்கிரஸ்), அனுராக் தாக்கூர் (பாஜக) மற்றும் லால்ஜி வர்மா (சமாஜ்வாதி கட்சி) ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதையும் படிங்க: மத்திய பிரதேசத்தில் பாஜக தலைவர் மீது துப்பாக்கிச் சூடு! என்ன நடந்தது? - Madhya Pradesh BJP Leader shot