டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்டு வருதாகவும் அதன் காரணமாக அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் இந்த 5 ஆண்டுகள் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், தமிழக பகுதிகளை ஒன்றிணைத்து தமிழர்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கு காரணம் என்ற குற்றசாட்டை முன்வைத்தும் கடந்த 1991 ஆம் ஆண்டு மத்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்தது.
அதைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மத்திய அரசு நீடித்து வருகிறது. இது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தடை நீடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை இந்தியாவில் நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் அந்த அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக தொடர் பிரசாரம் செய்வதாகவும் இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான வெறுப்புணர்வை அதிகரிக்க செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்டு வருதாகவும் அதன் காரணமாக அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மே 14ஆம் தேதி காலை 11.40 மணி.. பிரதமரின் வேட்புமனு தாக்கலில் இவ்வளவு ரகசியங்களா? - PM Modi File Nomination