டெல்லி: நாடு முழுவதும் இன்று அதிகாலை முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்தன. இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் சா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா அதினியம் 2023 ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் டெல்லி கமலா மார்க்கெட் காவல் நிலைய பகுதியில் சாலையோர வணிகர்கள் மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநில குவாலியரில் தான் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இன்று அதிகாலை 12.10 மணி அளவில் மோட்டர் சைக்கிள் திருட்டு தொடர்பாக புதிய குற்றவியல் சட்டத்தில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், டெல்லியில் உள்ள கமலா மார்க்கெட் காவல் நிலைய பகுதியில் சாலையோர வணிகர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு 12 மணிக்கு முன்பாக பதிவு செய்யப்பட்டதால் பழைய குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.
மேலும், டெல்லியில் சாலையோர வணிகர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை போலீசார் மதிப்பாய்வு செய்த பின் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அமித் ஷா கூறினார். மேலும் ஜூலை 1ஆம் தேதிக்கு முன்பாக நடந்த குற்றங்கள் அனைத்தும் பழைய குற்றவியல் சட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெறும் அனைத்து குற்றச் செயல்களும் புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் நாடாளுமன்ற்த்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி அந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பழைய குற்றவியல் சட்டங்கள் Vs புதிய குற்றவியல் சட்டங்கள்! வித்தியாசம் என்ன? - New Criminal Laws