ஹைதராபாத்: நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிட்ட திரைப் பிரபலங்கள் யார்? தொகுதிகளில் அவர்களின் நிலை என்ன என்பதை பார்க்கலாம்.
ராதிகா சரத்குமார் நிலை என்ன?: தமிழகத்தைப் பொறுத்தவரையில், விருதுநகர் மற்றும் கடலூர் மக்களவைத் தொகுதியில் இரு திரைப் பிரபலங்கள் களம் கண்டனர். சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, நடிகர் சரத்குமார் பாஜகவில் இணைந்த நிலையில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தாமரை சின்னத்தில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடார்.
இந்நிலையில், இன்று வாக்கு எண்ணப்பட்ட நிலையில், ராதிகா சரத்குமார் 1 லட்சத்து 35 ஆயிரத்து 526 வாக்குகளைப் பெற்று தோல்வியை தழுவி மூன்றாவது இடத்தை பிடித்தார். அதே தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 3 லட்சத்து 27 ஆயிரத்து 37 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, இரண்டு நாட்களுக்கு முன்னர், தனது மனைவியின் வெற்றிக்காக நடிகர் சரத்குமார் விருதுநகரில் உள்ள ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இத்தொகுதியில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் மகன் போட்டியிட்ட நிலையில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
தங்கர்பச்சானின் தற்போதைய நிலைபாடு?: நடிகர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் என பன்முகத்திறமை கொண்ட தங்கர் பச்சான் சினிமாத் துறையில் இருந்து முதல் முறையாக அரசியலில் தடம் பதித்தார். பாமகவில் இணைந்த இவர் பாஜக கூட்டணியில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.
இந்நிலையில், தங்கர் பச்சான் சுமார் 2 லட்சத்து 23 ஆயிரத்து 72 வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளார். காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய எம்.கே விஷ்னுபிரசாத் 4 லட்சத்து 50 ஆயிரத்து 401 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக, தங்கர் பச்சான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, கிளி ஜோசியம் பார்த்த நிலையில் கிளி ஜோசியம் பார்த்த ஜோசியர் கைது செய்யப்பட்டு, கிளிகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெரிதும் கவனம் ஈர்க்கப்பட்டது.
கேரளாவில் பாஜகவிற்கு கணக்கு தொடங்கிய சுரேஷ் கோபி: தமிழில் தீனா, ஐ போன்ற படங்களில் நடித்த பிரபல கேரள நடிகர் சுரேஷ் கோபி பாஜக சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக ராஜ்யசபா எம்.பியாக பதவி வகித்து வந்த நிலையில், இம்முறை முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் களமிறங்கினார். திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட இவர், கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட வி.எஸ் சுனில்குமாரை பின்னுக்குத் தள்ளி 4 லட்சத்து 12 ஆயிரத்து 338 வாக்குகளைப் பெற்று சுரேஷ் கோபி வெற்றி பெற்றார்.
திருச்சூரில் கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் சி.பி.எம் கட்சியினர் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது இவருக்கு கூடுதல் பலமாக அமைந்தது. மேலும், இவரது வெற்றியைத் தொடர்ந்து சுரேஷ் கோபி மனைவி வீட்டின் வெளியே காத்திருந்தவர்களுக்கு பாயாசம் வழங்கினார். சுரேஷ் கோபி வெற்றி பெற்றதை அடுத்து, முதல் முறையாக கேரளாவில் பாஜக கணக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
மக்களவை செல்லும் கங்கனா ரனாவத்: பிரபல நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில ஆண்டுகளாக மோடி மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நிலையில், முதல் முறையாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார்.
இமாச்சலின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர், 5 லட்சத்து 37 ஆயிரத்து 22 வாக்குகளை பெற்று முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்யா சிங்கை 74 ஆயிரத்து 755 வாக்குகளில் தோற்கடித்தார். களம் கண்ட முதல் தேர்தலில் வெற்றியும் பெற்று முதல் முறையாக மக்களவைக்கு செல்ல உள்ளார்.
வெற்றி வாகை சூடிய பவன் கல்யாண்: தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் தம்பியும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் ஆந்திராவின் பிதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். ஒய்.எஸ் ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வங்கா கீதாவை வீழ்த்தி 1 லட்சத்து 34 ஆயிரத்து 394 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்கிறார்.
இந்தத் தேர்தலில் தெலுங்குதேசம், பாஜகவுடன் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்தார் பவன் கல்யாண். அவரின் கட்சிக்கு 21 தொகுதிகள் சட்டமன்றத்துக்கும் 2 தொகுதிகள் மக்களவைக்கும் ஒதுக்கப்பட்டது. பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் ராம் சரண் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
தேர்தலில் ஜொலித்த ஹேம மாலினி: உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் கண்டார் நடிகை ஹேம மாலினி. இந்த மக்களவைத் தேர்தலில் மதுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் காங்கிரஸ் முகேஷ் தங்கரை விட 2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ராமராக நடித்தவர் வெற்றி: பிரபல ராமாயணம் தொலைக்காட்சி தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் உத்தரப் பிரதேசத்தின் மீரட் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கினார். 5 லட்சத்து 46 ஆயிரத்து 469 வாக்குகளை பெற்று அதே தொகுதியில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக களமிறங்கிய சுனிதா வர்மாவை விட கிட்டதட்ட 10 ஆயிரத்து 585 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சத்ருகன் சின்ஹா வெற்றி: பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மேற்குவங்காளத்தின் அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டார். 6 லட்சத்து 56 ஆயிரத்து 45 வாக்குகளை பெற்று பாஜக வேட்பாளர் சுரேந்திரஜீத் சிங்கை வீழ்த்தியுளார். இருவருக்கும் 59 ஆயிரத்து 564 வாக்கு வித்தியாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசியல் களத்திலும் சிக்சர் அடித்த யூசுப் பதான்: முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்கு வங்காளத்தின் பராம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில், 5 லட்சத்து 23 ஆயிரத்து 630 வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஆதிட் ரஞ்சன் சவுத்ரியை வீழ்த்தியுள்ளார்.