அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மோசடி நபர் ஒருவர் போலியாக நீதிமன்றம் நடத்தி பல வழக்குகளில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. அண்மையில் அரசு நிலத்தை தாரை வார்க்க போலி உத்தரவு பிறப்பித்ததன் மூலம் போலீசில் பிடிபட்டுள்ளார்.
குஜராத்தில் கடந்த ஆண்டு போலி அரசு அலுவலகங்கள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்தது. அதே போல மோர்பி மாவட்டத்தில் போலி சுங்கசாவடி நடத்தி வாகன ஓட்டிகளிடம் கோடிகணக்கான ரூபாய்களை சுருட்டியதும் அம்பலமானது இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அகமதாபாத் சிட்டி சிவில் நீதிமன்ற பதிவாளர் ஹர்திக் தேசாய் போலீசாரிடம் அளித்த புகாரில், "மாரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்ற நபர் நிலம் தொடர்பான வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்பாயத்தின் நீதிபதியாக தம்மை கூறிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். தாக்கூர் பாபுஜி சானாஜி என்ற நபருக்கு அகமதாபாத் நகரில் உள்ள பால்டி பகுதியில் உள்ள அரசு நிலத்தை கொடுக்கும்படி மாரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் போலியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்,"என கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க : எஸ்பிஐ பேரில் போலி வங்கிக் கிளை.. மோசடியாளர்கள் போலீசில் சிக்கியது எப்படி?
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மாரிஸ் சாமுவேல் கிறிஸ்டியனை கைது செய்துள்ளனர். விசாரணை குறித்து பேசிய போலீசார்,"அகமதாபாத் நகரில் உள்ள பால்டி பகுதியில் சர்வே எண் 306 கொண்ட அரசு நிலத்தை தாக்கூர் பாபுஜி சானாஜி என்பவருக்கு கொடுக்கும்படி போலியான உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை செயல்படுத்தக் கோரி வழக்கறிஞர் ஒருவர் மூலம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்த போதுதான் அந்த உத்தரவு போலி என தெரிய வந்தது. பதிவாளரின் புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் நீதிமன்றத்தைப் போலவே தமது அறையை மாற்றி உள்ளார்," என்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மாரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் இது போல போலி நீதிமன்றத்தை நடத்தி வருவதாகவும்,எனவே இதுவரையிலும் அவர் பிறப்பித்த உத்தரவுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதே நபர் மீது கடந்த 2015ஆம் ஆண்டு தொடரப்பட்ட வேறு ஒரு மோசடி வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்