டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 5வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்துள்ள நிலையில், அவரது தனி உதவியாளர் பிபவ் குமார் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி என்.டி.குப்தா ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (பிப்.6) திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை ஏற்கனவே நவ.2, டிச.21, ஜன.3 ஆகிய தேதிகளில் அனுப்பிய சம்மனுக்கு இதுவரை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில், பிபவ் குமார் மற்றும் முன்னாள் டெல்லி ஜல் போர்டு உறுப்பினர் ஷலப் குமார் ஆகியோருக்குச் சொந்தமான இடங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் பலத்த பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, தன்னை கைது செய்தாலும் டெல்லி அரசின் வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்படாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். "பள்ளிகளை கட்டியதால் மணீஷ் சிசோடியாவும், கிளினிக்குகளை கட்டியதால் சத்யேந்தர் ஜெயின் மொஹல்லாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்" என கெஜ்ரிவால் மேலும் கூறினார். மேலும், மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத்துறை ஆம் ஆத்மி தலைவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்தாலும், பள்ளிகள் கட்டுவதையும் மற்றும் மொஹல்லா கிளினிக்குகள், டெல்லியில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவத்தை அளிப்பதையும் யாராலும் தடுக்க முடியாது என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தங்களது கட்சியில் சேர வேண்டுமென பாஜக இது போன்ற எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தாலும், அதற்கெல்லாம் அடிபணிய வாய்ப்பில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தன்னையும், ஆம் ஆத்மி கட்சியினரையும் பாஜகவில் இணைக்க வேண்டுமென நினைத்தால் அது நடக்காது எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக, ஜன.4ஆம் தேதி அமைச்சர் அதிஷிக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அவர் வீட்டில் இல்லாமல் இருந்த நிலையில், அவருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸை பெற்றுக் கொள்ளுமாறு அவரது அலுவலக அதிகாரிகளிடம் கூறியுள்ளதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
இதனிடையே, டெல்லி அரசை கவிழ்க்க பாஜக அரசு சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும், இதற்காக ரூ.25 கோடி வரை ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டு வருதாகவும் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மல்லுக்கட்டும் அமலாக்கத்துறை.. புது நடவடிக்கை என்ன?