வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மேப்பாடி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மக்கள் மண்ணில் புதைந்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் இடுபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து மீட்கப்பட்ட நபர்கள், அருகில் உள்ள முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் வீடுகளில் இருந்த செல்லப் பிராணிகள் மழை வருவதை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றன.
மழை குறைந்த பின்னர் அங்கு வந்த வளர்ப்பு நாய்கள் தங்களுடைய எஜமானர்களையும், வீட்டையும் காணாது வீடுகளைத் தேடிச் சுற்றிச் சுற்றி வருகிறது. இது தொடர்பான காட்சிகள் பல சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதற்கு மனிதாபிமான அடிப்படையில் சிலர் அந்த நாய்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி உதவி வருகின்றனர்.
நாயை மீட்ட நபர்: இந்த நிலையில் அட்டமலை பகுதியில் சந்தோஷ் என்பவர் தனது பூனைக்கு உணவு வைக்க சென்றுள்ளார். அப்போதும் அவர் வீட்டில் அருகே நாள்தோறும் சுற்றித் திரியும் சுப்பு என்ற குட்டி நாய் அவரைக் கண்டதும் குரைத்து ஓடோடி வந்துள்ளது.
உடனே சுப்பு குட்டி நாயை தூக்கி சந்தோஷ் அதை கொஞ்சினார். அவரிடம் குழந்தை போல் அடைக்கலமானது நாய்க்குட்டி. நான்கு நாட்கள் இரவு பகல் என யாரும் இல்லா ஊரில் தனியாகப் பட்டினியோடு சுற்றித்திரிந்த சுப்பு நாயை மீட்ட சந்தோஷ் அதை குழந்தை போல் அனைத்து சாலையில் நடந்து வந்தார்.
அந்த காட்சி காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது. இது குறித்து சந்தோஷ் கூறுகையில் "நிலச்சரிவு காரணமாக கிராம மக்கள் அனைவரும் முகாமுக்கு சென்றுள்ளோம். இன்று எனது பூனைக்கு உணவு வைக்க வந்த போது அருகில் உள்ள வீட்டில் சுப்பு என்ற நாய்க்குட்டி என்னை பார்த்ததும் குரைத்து அழைத்தது.
அப்போது நாய்க்குட்டிக்கு நடக்க சக்தி இல்லாமல் பட்டினியோடு சோர்ந்து காணப்பட்டது. உடனே கைகளில் எடுத்தவுடன் எனது முகத்தை நாக்கால் தடவியது. இதுவும் ஒரு உயிர் தானே என அதை கைகளில் தூக்கிக்கொண்டு பிஸ்கட்டுகளை வழங்கினேன்.
டீ குடித்தது தற்போது அதை அவரின் உரிமையாளரிடம் எடுத்துச் செல்கிறேன்" என்றார். மிகப்பெரிய பேரிடரிலும் நான்கு நாட்களாக ஊருக்குள் யாரும் இல்லாததை கண்டு பட்டினியோடு சுற்றி திரிந்த சுப்பு நாய்க்குட்டி பத்திரமாக மீட்கப்பட்டது உரிமையாளருக்கும் அங்குள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: பயனளிக்காத ரேடார் சிக்னல்.. 350-ஐ கடந்த உயிர் பலி!