ஐதராபாத்: இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான சாம் பிட்ரோடா, தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், உலகின் ஜனநாயகத்துக்கு இந்தியா ஓர் சிறந்த உதாரணம் என்றும் நாட்டின் கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களை போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களை போலவும், வடக்கில் உள்ள மக்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இப்படி பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை நம்மால் ஒற்றுமையாக வைத்திருக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும், கடந்த 75 ஆண்டுகளில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியான சுற்றுச்சுழலில் வாழ்ந்து வருவதாகவும் அவ்வப்போது சிறு சண்டைகள் ஆங்காங்கே நிகழ்ந்தாலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவிய நிலையில், நாட்டில் நிறவெறியை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்து வருவதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இன்று (மே.8) தெலங்கானா மாநிலம் வாரங்கலில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துகள் கோபமடையச் செய்துள்ளன என்றும் நாட்டு மக்களவை தோல் நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், தன் மீது அவதூறுகள் வீசப்படும்போது தன்னால் பொறுத்துக்கொள்ள முடியும் என்றும் மக்கள் மீது வீசப்படும் அவதூறுகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
நாட்டின் குடியரசுத் தலைவர் என்ற நற்பெயரும், ஆதிவாசி குடும்பத்தின் மகளுமான திரெளபதி முர்முவை ஏன் இவ்வளவு காலம் காங்கிரஸ் கட்சி வீழ்த்த வேண்டும் என நினைக்கின்றன என்பது குறித்து அதிக முறை தான் யோசித்ததாகவும் அதற்கு இன்று தான் காரணத்தை தெரிந்து கொண்டதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
மேலும், காங்கிரசின் இளவரசர் ராகுல் காந்திக்கு தத்துவ வழிகாட்டியாக அமெரிக்காவில் ஒரு மாமா இருப்பதாகவும், கிரிக்கெட்டில் இக்கட்டான சூழலில் மூன்றாவது நடுவரை நாடுவது போல் ராகுல் காந்தி தனது அமெரிக்க மாமாவின் ஆலோசனைகளை பெறுவதை தான் அறிந்து கொண்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அந்த தத்துவ மாமா யாரெல்லாம் கருப்பு நிற தோல் கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் ஆப்பிரிக்கரிக்கர்கள் என கூறியதாகவும், தோல் நிறத்தின் மூலம் நாட்டு மக்களை தவறாக பயன்படுத்துவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அவர்கள் நாட்டை எங்கே கொண்டு செல்வார்கள் என கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி எந்த நிறத்தில் இருந்தாலும் சரி மக்கள் கிருஷ்ணரை வணங்குபவர்கள் என்று தெரிவித்தார்.
அதேநேரம் சாம் பிட்ரோடாவின் கருத்து காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செய்லாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதாக பிட்ரோடா வெளியிட்ட கருத்துகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் சாம் பிட்ரோடாவின் கருத்துகள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வாயிலாக வந்தவை என பொறுப்பேற்காது என்றும் பதிவிட்டு உள்ளார்.
முன்னதாக, சாம் பிட்ரோராவின் சர்ச்சை கருத்து வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த இமாச்சல பிரதேசம் மண்டி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத், ராகுல் காந்தியின் வழிகாட்டி சாம் பிட்ரோடா, இந்தியர்களுக்கு எதிரான இனவெறி மற்றும் பிளவை ஏற்படுத்தும் கருத்துகளை கேளுங்கள்.
காங்கிரஸ் கட்சியின் முழு சித்தாந்தமும் நாட்டை பிளவுபடுத்தி ஆட்சி செய்வது மட்டுமே. சக இந்தியர்களை சீனர்கள் என்றும் ஆப்பிரிக்கர்கள் என்றும் அழைப்பது வேதனை அளிக்கிறது, காங்கிரசுக்கு இது அவமானம் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இமாச்சல பிரதேச மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! - Lok Sabha Election 2024