டெல்லி: மக்களவையில் கடும் அமளிக்கு இடையே பேரிடர் மேலாண்மை திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடளுமன்றத்தில் அவர் பேசியதாவது,"நான் இந்த மசோதாவை எதிர்க்க விரும்புகிறேன். இந்த மசோதா இந்த அவைக்கு வரும்முன் சிந்தித்து விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதில் பல்வேறு விஷயங்கள் விடுபட்டுள்ளன. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு அதிகளவில் ஏற்படுகிறது. தற்போது நாம் பேரிடர் மேலாண்மையை தீவிர பிரச்சினையாக பார்க்கவேண்டும்.
பேரிடர் மேலாண்மை மசோதாவுக்கு எதிர்ப்பு: ஒவ்வொருமுறையும் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்படும்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வழங்குவதாக பெருமையாக கூறுகிறீர்கள். ஆனால் அந்த தொழில்நுட்பங்களை மத்திய அரசு சரியாக பயன்படுத்துவதில்லை. அவர்கள் வழங்கும் முன்னெச்சரிக்கை ஜோசியம் பார்ப்பதுபோல்தான் உள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 மீதான விவாதத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தையும், அவற்றை ஒன்றிய அரசு கையாளும் தன்மை குறித்தும் பேசினேன்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 12, 2024
இயற்கை பேரிடர் அபாயம் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்க்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டிற்கு… pic.twitter.com/et4Bx7g5WU
நூற்றியம்பது கிமீ தொலைவில் புயல் வந்த பின்னால்தான் மத்திய அரசினால் எச்சரிக்கை வழங்க முடிகிறது. அதை வைத்து மக்களை உடனடியாக அப்பகுதிகளில் இருந்து பாதுக்காப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய நேரம் போதுவதில்லை. மத்திய அரசின் ரேடார் அமைப்பை மேம்படுத்தவேண்டும். மற்ற நாடுகள் புயல் 300 கி.மீ தொலைவில் உருவாகும்போதே கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுத்துவிடுகின்றனர். நாமும் அதேபோல் செய்தால்தான் மாநில அரசுகள் மக்களை உரிய நேரத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சேர்க்க முடியும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,"மத்திய அரசு மாநிலங்களுக்கு போதிய நிவாரண நிதியை வழங்குவதில்லை. மிக்ஜாம் புயலின்போது 37,902 கோடி ரூபாய் நிதியுதவி கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர வேண்டியிருந்தது. ஆனாலும் மத்திய அரசு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை. மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு ரூபாய்கூட தராமல் கல்நெஞ்சோடு நடந்துகொண்டிருக்கிறது. இது தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல். இதற்கு விரைவிலேயே தக்க பாடம் சொல்லித்தரப்படும்" என்று பேசினார்.
தென்காசி எம்.பி.ராணி ஸ்ரீகுமார்: இதனை தொடர்ந்து தென்காசி எம்.பி.டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஆர்டிக்கல் 377 ன் படி வலியுறுத்தி பேசினார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,"தென்காசியில் சில சிறுநிதி நிறுவனங்கள் (எம்.எப்.ஐக்கள்) மற்றும் தனியார் சுயஉதவி குழுக்கள் (எஸ்.எச்.ஜிக்கள்) ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிடம் ஆபத்தான முறையில் சுரண்டுகின்றன.
இந்த நிறுவனங்கள் கடன் வழங்குவது என்ற கோணத்தில் கொள்ளையடிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளின் விளைவாக பாதிக்கப்படும் மக்கள் தங்களது குடும்பங்களை இடம்பெயர்த்துக் கொள்வது மட்டுமில்லாமல், சில நேரங்களில் நிதி நிறுவனங்களின் அழுத்தத்தால் தனிநபர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் மிக சோகமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
எனவே இந்த இக்கட்டான நெருக்கடிக்கு தீர்வு காண மத்திய அரசு உடனடியாக அவசரகால நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதில் முதலாவதாக, கடன் வழங்கும் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த எம்.எப்.ஐக்கள் மற்றும் எஸ்.ஹெச்.ஜி ஆகிய நிறுவனங்கள் கண்டிப்பாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
கூடுதலாக, வட்டி விகிதங்களில் வரம்புகள் மற்றும் சுரண்டல் நடைமுறைகளுக்கு கடுமையான அபராதங்களை ஒன்றிய அரசு விதிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடன் வாங்குபவர்கள் தங்கள் உரிமைகளை நன்கு புரிந்து கொள்ள நிதி கல்வியறிவு பிரச்சாரங்கள் மூலம் அதிகாரம் பெறவும் உரிய சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...வரும் வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் வாய்ப்பு!
அணு மின்நிலைய ஊழியர்களுக்கு பாதுகாப்பு:நாட்டின் அணு மின்நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் விவரங்கள் கேட்டு திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "அணுமின் நிலையங்களை ஆய்வு செய்ய ஏதேனும் சோதனை மற்றும் கண்காணிப்பு அமைப்பு உள்ளதா, அனைத்து அணுமின் நிலையங்களிலும் பணியாளர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட SoP களை கடைபிடிக்கின்றனரா என்பது குறித்து விவரங்கள் என்ன, நடைமுறையிலுள்ள திட்டங்களின் எண்ணிக்கை மற்றும் அதில் தொடர்புடைய ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சாதகமான பணிச்சூழலை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.