ஹைதராபாத்: தொடர்ச்சியாக மூன்றாவது நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அவருடன் பாஜக மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் உள்பட 71 மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமராக நரேந்திர மோடிக்கும், அதைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மோடி அமைச்சரவையில் நரேந்திர மோடியுடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்பு இணை அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து 13 அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த போதும், எல்.முருகனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அவர் 2 முறையாக இணையமைச்சராக பதவியேற்றுள்ளார். தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் அமைச்சரவையில் தங்கள் இடத்தை தக்க வைத்துள்ளனர்.
கர்நாடகாவைப் பொறுத்தவரையில் அங்குள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 19 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக 17 இடங்களையும் ஜேடிஎஸ் 2 இடங்களையும் கைப்பற்றியது. மேலும் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியானது 9 இடங்களை கைப்பற்றியது.
இந்தநிலையில் பாஜக கூட்டணிக் கட்சியான மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான எச்.டி.குமாரசாமிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ராம் மோகன் நாயுடு, சந்திர சேகர் பெம்மாசானி ஆகிய இருவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பாஜக சார்பில் ஸ்ரீனிவாச வர்மாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சந்திரசேகர பெம்மசானியின் சொத்து மதிப்பு ரூ.5,700 கோடியாகும், இவர் தான் மிகவும் பணக்கார அமைச்சராக அறியப்படுகிறார்.
தெலங்கானவை பொறுத்தவரையில் அங்கு பாஜகவின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பன்டி சஞ்சய், கிஷன் ரெட்டி ஆகியோருக்கும் அமைச்சர்களாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் கேரள மாநிலத்தில் பாஜக சார்பாக போட்டியிட்டு வென்று கவனம் ஈர்த்த நடிகர் சுரேஷ் கோபியும் இணை அமைச்சராகியுள்ளார்.
இதையும் படிங்க: அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் என்றால் என்ன? திருமாவளவனும், சீமானும் சாதித்தது என்ன?