ஐதராபாத்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக பேசிய வீடியோவை மார்பிங் செய்து சிலர் சமூக வலைதளங்களில் பரப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியதாக சமூக ஊடகங்களில் வீடியோ வைரலானது.
மேலும் அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததோடு பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால் இடஓதுக்கீடை ரத்து செய்து விடுவார்கள் என குறிப்பிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமித் ஷாவுக்கு எதிராக போலி வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது தொடர்பாக பாஜக மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், சமூகங்களிடையே உள்ள நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் சில சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. இது பொது அமைதி மற்றும் ஒழுங்கை பாதிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புகார் தொடர்பாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமித் ஷாவின் வீடியோ விவகாரத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மே 1ஆம் தேதி ரேவந்த் ரெட்டி பயன்படுத்திய அனைத்து மின்னணு உபகரணங்களுடன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என டெல்லி போலீசார் சம்மனில் தெரிவித்து உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்த போலி வீடியோ விவகாரத்தில் தெலங்கானா முதலமைச்சருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "பாஜகவினரை கேள்வி கேட்டதால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. பாஜகவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு அமித்ஷா நோட்டீஸ் அனுப்புகிறார்.
இதுவரை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்திய பிரதமர் மோடி, தற்போது டெல்லி போலீசையும் பயன்படுத்தி இந்தத் தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டு உள்ளனர்" என்று ரேவந்த் ரெட்டி கூறினார்.
இதையும் படிங்க: அந்தரத்தில் நிலை தடுமாறிய ஹெலிகாப்டர்! அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய அமித் ஷா! - Amit Shah Helicopter Loses Control