வயநாடு: கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதில், அப்பகுதியில் உள்ள பல வீடுகள், சாலைகள், பாலங்கள் என அனைத்தும் சேதமடைந்தது. இதற்கிடையே, நேற்று அதிகாலையில், வயநாடு மேப்பாடி பகுதியில் உள்ள சூரல் மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேப்பாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை என்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மேலும், அந்த நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த பேரிடரில் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
#WATCH | Kerala: Rescue and search operation underway in Wayanad's Chooralmala after a landslide broke out yesterday early morning claiming the lives of 143 people
— ANI (@ANI) July 31, 2024
(latest visuals) pic.twitter.com/aqAG9uZMEP
இதற்கிடையே, நேற்று இரவு மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட தேடுதல் பணி, இன்று காலை 6.22 மணிக்கு மீண்டும் துவங்கியது. மீட்புப்படையினர் 4 குழுக்களாகப் பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மீட்புப்பணிக்காக அப்பகுதியில் தற்காலிக பாலம் ஒன்றை அமைத்து, சுமார் 150 ராணுவ வீரர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோரச்சம்பவத்தில், இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது வரை உயிரிழந்தவர்களில் 54 உடல்கள் பிரேதப்பரிசோதனை நிறைவடைந்து, அதில் 52 உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று நடந்த பிரேதப் பரிசோதனையில் சில சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:100 கி.மீ. தாண்டி கிடைத்த சடலங்கள்; கேரள நிலச்சரிவின் கோரத்தாண்டவம்