டெல்லி : மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய ஆயுத படையில் உள்ள கான்ஸ்டபிள் பொதுப் பணிக்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியானது. பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் உள்ள 128 மையங்களில் கான்ஸ்டபிள் பொதுப் பணிக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த பணிக்கான தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே முன்னர் எழுத முடியும் என்ற நிலையில் தற்போது 13 மொழிகளில் தேர்வு எழுத மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, ஒடியா, உருது, மணிப்பூரி, கொங்கனி, பஞ்சாபி ஆகிய 13 மொழிகளில் தேர்வு எழுதலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய ஆயுத படையில் அனைத்து தரப்பு இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், மத்திய அரசு இந்தி மொழி பேசாத மாநிலங்களை வஞ்சிப்பதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்கவும் ஆளும் பாஜக அரசு இந்த நடவடிக்கையை கையில் எடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் கான்ஸ்டபிள் பொதுப் பணி தேர்வு பலதரப்பட்ட இளைஞர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், இந்த தேர்வு தொடர்பான கூடுதல் தகவல்களை அறிய https://ssc.nic.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
இதையும் படிங்க : "நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் சிஏஏ அமல்"- மத்திய அமைச்சர் அமித் ஷா!