டெல்லி : பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், நாடும் முழுவதும் ஒரு கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வீடுகளின் கூரைகளில் சூரிய மின் தகடு பொருத்தும் பிரதமரின் சூர்ய கர் முப்த் பிஜ்லி யோஜனா திட்டத்திற்கு 75 ஆயிரத்து 21 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளதாக தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்பங்கள் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக பெற உள்ளதாக அவர் குறிப்பிட்டார். முன்னதாக இந்த திட்டத்தை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2025ஆம் ஆண்டு முதல் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் சூரிய மின் தகடுகள் பொருத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளதாக கூறினார்.
2024ஆம் ஆண்டு காரீப் பருவத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து சார்ந்த பயிர்களுக்க்கான உரங்களான பாஸ்பேட் மற்றும் பொட்டாசீயம் உள்ளிட்ட உரங்களுக்கான மானியத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக கூறினார். விவசாயத்திற்கான உரங்களுக்கு 24 ஆயிரத்து 420 கோடி ரூபாய் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்வதேச அளவில் புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, ஜாகுவார், பூமா உள்ளிட்ட விலங்குகளை பரிமாற்றம் செய்யும் திட்டத்தில் 2027 முதல் 2028 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பட்ஜெட்டில் 150 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார்.
இந்தியாவில் செமி கண்டெக்டர் ஆலை நிறுவவுவது தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய முடிவு எடுத்து உள்ளதாகவும், நாட்டின் முதல் செமி கண்டெக்டர் உற்பத்தி ஆலை டாடா மற்றும் தைவானின் பவர்சிப் நிறுவனம் இணைந்து குஜராத் மாநிலம் தோலேராவில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: கூடுகிறது பாஜக மத்திய தேர்தல் குழு! வேட்பாளர் பட்டியல் வெளியீடு?