டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டம் மற்றும் இதர நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்து திட்டங்களின் கீழும் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி, நடப்பாண்டு ஜூலை முதல் 2028ஆம் ஆண்டு வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கபட்டுள்ளது.
75 வது சுதந்திர தினத்தன்று நாட்டில் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அவசியம் குறித்து பிரதமர் ஆற்றிய உரையின் அடிப்படையில், நாட்டில் ரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்காக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குதல் என்ற முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அரிசி செறிவூட்டும் முன்முயற்சி, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசின் 100% நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அரிசி செறிவூட்டும் முயற்சியை மார்ச் 2024 க்குள் நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்த முடிவு செய்தது. மூன்று கட்டங்களாக அனைவருக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கான இந்த திட்டத்தின் இலக்கு நடப்பாண்டு மார்ச் மாதம் எட்டப்பட்டது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டத்தை நடப்பாண்டு ஜூலை முதல் 2028ஆம் ஆண்டு வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கபட்டுள்ளது.
Cabinet Briefing by Union Minister Ashwini Vaishnaw
— PIB in Tamil Nadu (@pibchennai) October 9, 2024
🕰️ 3.00 PM@PMOIndia @narendramodi @AshwiniVaishnaw @Murugan_MoS @MIB_India @PIB_India
Watch live:https://t.co/c1gXGuUEvH
ரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச்சத்து ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள நடவடிக்கையாக உணவு செறிவூட்டல் உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்திய மக்கள் தொகையில் 65% பேர் அரிசியை பிரதான உணவாக உட்கொள்கிறார்கள். அரிசி செறிவூட்டல் என்பது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரங்களின்படி, இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி 12 போன்ற நுண்ணூட்டச்சத்துக்களை வழக்கமான அரிசியில் செறிவூட்டுவதாகும்.