டெல்லி: இந்த ஆண்டு 18வது மக்களவை தேர்தல் நடைபெற்றதால், கடந்த பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
இதையடுத்து, மீதமுள்ள ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரையிலான பட்ஜெட் கூட்டத் தொடர், 2024க்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
Hon’ble President of India, on the recommendation of Government of India, has approved the proposal for summoning of both the Houses of Parliament for the Budget Session, 2024 from 22nd July, 2024 to 12 August, 2024 (Subject to exigencies of Parliamentary Business). Union Budget,…
— Kiren Rijiju (@KirenRijiju) July 6, 2024
இதையடுத்து, 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரன் ரிஜிஜூ தனது எக்ஸ் பக்கத்தில், "மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர், இந்திய அரசின் பரிந்துரையின் பேரில், 2024 ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12, 2024 வரை பட்ஜெட் கூட்டத் தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் அழைப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் 2024 ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக 18வது மக்களவை தேர்தலுக்கு பின் கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் முறையாக மக்களவை கூடியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.
18வது மக்களவையில் முதல் கூட்டத் தொடரில் நீட் வினாத் கசிவு, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் பெரும் பேசு பொருளாகின. இந்நிலையில், மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில், அதிலும் எதிர்க்கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிரான தங்களது குரலை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யபட உள்ளதால் பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இரண்டு போலீசார் உயிரோடு எரித்துக் கொல்ல முயற்சி! என்ன நடந்தது? - Man Set to fire on cops