பல்கார் (மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி, கடற்படை தினத்தன்று 35 அடியில் மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 26) அடித்த பலத்த காற்றில் அந்த சிலை இடிந்து விழுந்தது. இந்த நிகழ்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளி்ட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, சிவாஜி சிலையை நிறுவிய ஒப்பந்ததாரர் மீது சிந்துதுர்க் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன், சிலை இடிந்து விழுந்ததற்கான காரணத்தை ஆராய, கூட்டு தொழில்நுட்ப குழுவை அமைத்து மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், பல்கார் மாவட்டத்துக்குட்பட்ட வத்வான் துறைமுகத்துக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் மதி்ப்பீட்டிலான தி்ட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "மாமன்னர் சிவாஜி சிலை இடிந்து விழுந்த சம்பவத்துக்காக முதலில் அவரது பாதங்களில் என் தலையை வைத்து சிரம்தாழ்ந்து மானசீகமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இச்சம்பவத்தால் மனவருத்தம் அடைந்தவர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என்று கூறினார்.
"மாமன்னர் சத்ரபதி சிவாஜி என்பது ஒரு பெயரோ, மன்னரோ மட்டுமல்ல. அவர் நமது போற்றுதலுக்குரியவர்; வணங்கத்தக்கவர். ஆனால் சில பேர் வீர சவர்க்கார் குறித்து அவதூறாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளதுடன், அதற்காக அவர்கள் மன்னிப்பு கோரவும் தயாராக இல்லை." என்றும் மோடி பேசினார்.