பெடுல் : விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் தேதியை விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு புறம் இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் பாஜக தொகுதிகளை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
இந்நிலையில், பிரபல மல்யுத்த வீரரான தி கிரேட் காளி, எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 இடங்களை தாண்டி கைப்பற்றும் என தெரிவித்து உள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் பெடுல் பகுதியில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கிரேட் காளி, "வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி 400 இடங்களை கைப்பற்றுவோம் தெரிவித்ததாகவும், அவர் கூறியது உண்மை, பாஜக நிச்சயம் 400 இடங்களை தாண்டி வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை நாட்டுக்காகவும் விவசாயிகளுக்காகவும் வழங்கி உள்ளதாக கிரேட் காளி கூறினார். அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணி உள்பட தேச நலன் சார்ந்த விஷயங்களில் பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு உள்ளதாகவும், மீண்டும் பெரும்பான்மையுடன் பிரதமர் ஆட்சியை பிடிப்பார் என்றும் கிரேட் காளி தெரிவித்தார்.
இதையும் படிங்க : பீகார் சாலை விபத்து: சாலையில் பறிபோன 9 உயிர்! எப்படி நடந்தது?