தானே (மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் உள்ள உல்ஹான்ஸ்நகரில் இருக்கும் ஹில் லைன் காவல் நிலையத்தில் வைத்து, நேற்று (பிப்.2) இரவு அக்காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் அனில் ஜெக்தாப் முன்னிலையில், பாஜக எம்எல்ஏ கன்பத் கெய்க்வாட் மற்றும் சிவசேனா கட்சியின் ஷிண்டே ஆதரவாளரும், கல்யாண் நகரத் தலைவருமான மகேஷ் கெய்காவாட் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் முரண்பாடுகள் ஏற்பட்டதால், பாஜக எம்எல்ஏ கன்பத் கெய்க்வாட், சிவசேனா பிரமுகர் மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவரது ஆதரவாளர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மகேஷ் கெய்க்வாட், தானேவில் உள்ள ஜூபிடர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் கன்பத் கெய்க்வாட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், இச்சம்பவத்திற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டே கண்டனம் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இதனிடையே, இன்று (பிப்.3) உல்ஹாஸ்நகர் நீதிமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினரை ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த இருதரப்பினரின் ஆதரவாளர்கள் பலரும் நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்தனர்.
இதனால், நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அதேநேரம், இதன் காரணமாக கன்பத் கெய்க்வாட் காணொலிக் காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, காவல் துறை தரப்பில் 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, கைது செய்யப்பட்டு உள்ள கன்பத் கெய்க்வாட்டை 11 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உல்ஹாஸ்நகர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், நிலப்பிரச்னை காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதாக துணைக் காவல் ஆணையர் தத்தா ஷிண்டே கூறியுள்ளார். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம், மகாராஷ்டிராவில் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா.. என்ன காரணம்?