பாட்னா : பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு சட்டபேரவையில் நடைபெற்றது. வாக்கெடுப்பில் 129 ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆட்சியை நிதிஷ் குமார் தக்கவைத்துக் கொண்டார்.
பீகாரில் ஜேடியு - ஆர்ஜேடி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி வகித்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகா ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். இதையடுத்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
மேலும், துணை முதலமைச்சர்களாக பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா மற்றும் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். நிதிஷ் குமாருடன் சேர்த்து 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து, நிதிஷ் குமார் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 29ஆம் தேதிக்குள் மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்தி முடிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன.
இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மனாத்தை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கொண்டு வந்தார். இதனிடையே நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் பீகார் சட்டப்பேரவையில் இன்று (பிப். 12) தொடங்கியது. கூட்டத்தில் பீகார் சட்டப்பேரவை சபாநாயகரும், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான அவாத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
சட்டப்பேரவை செயலர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவையில் வாசித்தார். தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் சபாநாயகரை நீக்கக் கோரிய தீர்மானத்திற்கு 125 ஆதரவு வாக்குகளும், 112 எம்.எல்.ஏக்கள் தீர்மானத்தை எதிர்த்தும் வாக்களித்தனர். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சபாநாயகர் பொறுப்பில் இருந்து அவாத் பிஹாரி சவுத்ரி நீக்கப்பட்டார்.
இதனிடையே ஆர்ஜேடி சட்டமன்ற உறுப்பினர்கள் நீலம் தேவி, சேதன் ஆனந்த், பிரகலாத் யாதவ் ஆகியோர் புதிதாக அமைந்து உள்ள ஜேடியு - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கட்சித் தாவியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், வாக்கெடுப்பின் போது 3 எம்.எல்.ஏக்களும் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களின் வரிசையில் அமர்ந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான உரையில் பேசிய பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஏறத்தாழ 9 முறை கூட்டணி தாவி முதலமைச்சராக பதவியேறுக் கொண்டதாகவும், அதிக முறை கூட்டணி தாவி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டவர் என்ற மோசமான சாதனையை படைத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவர் மீண்டும் கூட்டணி தாவ மாட்டார் என பிரதமர் மோடியால் உத்தரவாதம் அளிக்க முடியுமா என்று சட்டப்பேரவையில் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலமைச்சராக நிதிஷ் குமார் தொடர 129 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் எதிர்ப்பு வாக்குகள் பதிவாகவில்லை.
இதையும் படிங்க : "நிதிஷ் குமார் மீண்டும் கூட்டணி தாவ மாட்டார் என பிரதமர் மோடி உத்தரவாதம் அளிப்பாரா?" - பீகார் சட்டப்பேரவையில் தேஜஸ்வி அதிரடி!