சென்னை: பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளான இடத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) இன்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் ஏரியல் காட்சி: விபத்துக்குள்ளான ரயில் பாதையானது ஒரு பைபாஸ் ரயில் பாதையாக செயல்டுகிறது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையம் வராமல் பெரம்பூர் வழியாக கவரப்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களைக் கடந்து வடமாநிலங்களுக்கு செல்லும். இப்படி ஒரு முக்கியமான பாதையில் நேற்று நேரிட்ட விபத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் ரயில் பாதைகளில் குறுக்கும் நெடுக்குமாக கிடக்கின்றன. ரயில் விபத்தில் பெட்டிகள் தடம் புரண்டு கிடக்கும் ஏரியல் காட்சிகளும் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க : பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: பாலாசோர் ரயில் விபத்து போல கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்ததா?
விபத்தில் தடம் புரண்ட பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை கிரேன்கள் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் திடீரென சில மணி நேரம் மழை பெய்ததால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. எனினும் ரயில்வே ஊழியர்கள் மழையில் நனைந்து கொண்டே பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரயில் பெட்டிகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் ரயில் பாதைகள் வலுவாக உள்ளனவா என சோதனை ஒட்டமாக மெதுவான வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்படும். விபத்துக்குப் பின்னர் வழக்கம்போல விரைவு ரயில்கள் இயக்குவதற்கு தகுதியாக ரயில் பாதை உள்ளது என்று ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து கூறிய பின்னர் இந்த பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.