டெல்லி: ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்ட கருத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ள உச்ச நீதிமன்றம் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி இதுபோன்ற கருத்தை கூறலாம் என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டு உள்ளது.
சிறார் தொடர்பான ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக இளைஞர் ஒருவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த இளைஞர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல என்று கூறி இளைஞர் மீதான விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படாது என்றும் அதனை பிறருக்கு அனுப்புவதுதான் சட்டப்படி குற்றம் எனக் கூறி இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை எனக் கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் கருத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கடும் கண்டனம் தெரிவித்தார்,
மேலும், ஒரு நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் கருத்து கொடுமையானது என்றும் தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நோட்டீஸ் வழங்கக் கோரி உத்தரவிட்ட தலைமை நீதிபதி வழக்கின் மீதான விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க : அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!