டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் வைத்து கடந்த மார்ச் 11ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையின் விசாரணையை தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த இடைக்கால ஜாமீன் இன்றுடன் (ஜூன்.2) நிறைவடையும் நிலையில், அவர் மீண்டும் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கு பிரசாரம் செய்ய வேண்டி ஜாமீனில் வெளி வந்த அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மே 11 முதல் 30ஆம் தேதி வரை ஏறத்தாழ 67 ரோடுஷோக்கள், பேரணிகள், பொதுக் கூட்டங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களில் 30 நேர்காணல்களில் கலந்து கொண்டார். மேலும், உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப், மகாரஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் 21 நாள் இடைக்கால ஜாமீன் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து மாலை மீண்டும் சரணடைய உள்ளார். இதனிடையே கட்சி உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அலோசனையில் ஈடுபட்டார். அப்போது ஆம் ஆத்மி கட்சியை உடைக்க நினைக்கும் பாஜக திட்டங்களை தவுடு பொடியாக்கும் படி மூத்த தலைவர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாக கூறப்படுகிறது.
மதியம் 3 மணி அளவில் வீட்டில் இருந்து புறப்படும் அரவிந்த் கெஜ்ரிவால் நேராக ராஜ் கட் சென்று அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். தொடர்ந்து அனுமான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் தொடர்ந்து கட்சி அலுவலகம் சென்று தொண்டர்களை சந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அதன் பின் திகார் சிறையில் சரண்டையை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை நீடிக்கக் கோரி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளதால் ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, 21 நாட்கள் ஜாமீனில் மேற்கொள்ளாத மருத்துவ பரிசோதனைக்கு தற்போது கால அவகாசம் வழங்கக் கூடாது என முறையிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அருணாசல பிரதேசத்தில் பாஜக ஆட்சி தக்கவைப்பு! சிக்கிமில் எஸ்கேஎம் கட்சி அபார வெற்றி! - Arunachal Sikkim Election Result