டெல்லி: டெல்லியில் உள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களைப் பிடித்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தனிப்பெரும்பான்மை ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாகக் கடந்த ஜனவரி 27ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி இருந்தார்.
7 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாகவும், 21 சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், நீங்களும் வாருங்கள் உங்களுக்கு ரூ.25 கோடி கொடுத்து பாஜக சீட்டில் போட்டியிட வைப்போம் என பாஜக தரப்பில் பேசியதாக அரவிந்த கெஜ்ரிவால் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், தனது அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை உள்ளது. இருப்பினும் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு தனது ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்வதாகக் கூறி, நேற்று டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்தார்.
இந்நிலையில், இன்று (பிப்.17) அந்த தீர்மானத்தின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்றது. தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “பாஜகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது ஆம் ஆத்மி கட்சி. இன்று பாஜக யாருக்காவது பயந்தால் அது ஆம் ஆத்மி கட்சியாகத் தான் இருக்கும். 2024இல் லோக்சபா தேர்தலில் பாஜக தோற்கவில்லை என்றால் 2029இல் பாஜகவிடமிருந்து ஆம் ஆத்மி இந்தியாவைக் காக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆம் ஆத்மியில் 62 எம்எல்ஏக்களில் 54 எம்எல்ஏக்கள் பங்கேற்ற நிலையில் நம்பிக்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு குரம் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் எந்த எம்எல்ஏவும் கட்சித்தாவவில்லை என கெஜ்ரிவால் தெரிவித்தார்.
மேலும், இரண்டு எம்எல்ஏக்கள் சிறையில் உள்ளனர். சிலர் உடல்நிலை சரியில்லாமலும், வெளியிடத்தில் இருப்பதாலும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்தார். முன்னதாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடுமாறு அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் இன்று காலையில் டெல்லி கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் முன்னிலையில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானதும் குறிப்பிடத்தக்கது.