பாட்டியாலா : பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக பஞ்சாப், சண்டிகர் பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் தலைநகர் டெல்லிக்குள் நுழையாத வகையில் எல்லைப் பகுதியில் முட்கம்பி வேலி உள்ளிட்டவைகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், எல்லையை நோக்கி வரும் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி பஞ்சாப், சண்டிகர் பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஷாம்பு, ஜுல்கன், பஸ்சைன், பட்ரன், சமானா, பாட்டியாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிப்பு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் முடிவு எட்டப்படவில்லை. சண்டிகர் ஷம்பு எல்லையில் 4வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த ராய் உள்ளிட்டோர் ஆகியோர் விவசாய சங்க உறுப்பினர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சண்டிகரில் விவசாய தலைவர்களுடன் மூன்று மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து குறிப்பிட்ட பகுதிகளில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி இணைய சேவை முடக்கப்பட்டதற்கு பஞ்சாப் முதலமைச்சர் பக்வத் மான் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதேபோல் அரியானாவின் அம்பாலா, குருஷேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், சிர்சா ஆகிய மாவட்டங்களில் மாநில அரசு இணைய சேவையை முடக்கி உள்ளது.
இதையும் படிங்க : எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான் - சட்டவிரோத செல்போன் டவர்கள் அமைப்பு! என்ன காரணம்?