மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி ஜோடியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் இணையின் திருமணம் வரும் 12ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. திருமணத்தை முன்னிட்டு கடந்த மூன்று மாதங்களாக ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களில் திருமண வீட்டார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அனந்த் அம்பானி - ராதிக மெர்ச்சன்ட் இணையின் திருமணத்திற்கு முன்பாக சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 50 ஜோடிகளுக்கு முகேஷ் அம்பானி - நீடா அம்பானி இலவசமாக திருமணம் நடத்தியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில் இந்த திருமண விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் நடைபெற்ற இந்த விழாவில், மணமக்கள் குடும்பத்தை சேர்ந்த 800க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இது போன்ற திருமண நிகழ்ச்சிகளை நடத்தப் போவதாக முகேஷ் மற்றும் நீடா அம்பானி உறுதி அளித்துள்ளனர். இந்த நிகழ்வில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்களுக்கு மங்கள சூத்திரம், திருமண மோதிரங்கள், மூக்குத்தி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் வழங்கப்பட்டன. இதே போல் காலில் அணியும் மெட்டி, வளையம் போன்ற வெள்ளி ஆபரணங்களும் வழங்கப்பட்டன. மணமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்சத்து ஆயிரம் ரூபாய் சீதனமாக வழங்கப்பட்டது.
மேலும், ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு வருடத்திற்குத் தேவையான மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், பல்வேறு வகையான 36 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாத்திரங்கள், கேஸ் அடுப்பு, மிக்சி மற்றும் மின்விசிறி, அத்துடன் ஒரு மெத்தை மற்றும் தலையணைகள் உள்ளிட்டவை முகேஷ் அம்பானி நீடா அம்பானி தம்பதியினர் வழங்கினர். மேலும், ஏழை எளிய மக்களுக்கு விருந்து வைத்தல், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது உள்ளிட்ட பணிகளில் அம்பானி குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.