டெல்லி : விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று (மார்ச்.2) பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் வைத்து 195 வேட்பாளர் பெயர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டார்.
தலைநகர் டெல்லியில் 5 இடங்களுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் பெயர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டு ஹர்ஷ் வர்தன் நாடாளுமன்றத்திற்கு தேர்வானார்.
தொடர்ந்து அவருக்கு மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சரவை மறுசீரமைப்பில் அவரிடம் இருந்த சுகாதாரத்துறை மன்சுக் மாண்டவியாவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் சாந்தினி சவுக் பகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் தனது மருத்துவர் தொழிலை மேற்கொள்ளப் போவதாக ஹர்ஷ் வர்தன் அறிவித்து உள்ளார். கிருஷ்ணா நகரில் உள்ள தனது காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக ஹர்ஷ் வர்தன் தனது எக்ஸ் பக்கத்தில், முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தேர்தல் வாழ்க்கைக்குப் பிறகு, ஐந்து சட்டமன்றத் தேர்தல்களிலும், இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் முன்மாதிரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கட்சி மற்றும் மாநில மற்றும் மத்திய அரசுகளில் பல மதிப்புமிக்க பதவிகளை வகித்தேன். தற்போது மீண்டும் எனது ஆணிவேரான மருத்துவ துறைக்கு செல்ல விரும்புகிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.
மேலும், தனக்கென்று ஒரு கனவு இருப்பதாகவும் அனைவரின் ஆசீர்வாதம் எப்போதும் தன்னுடன் இருக்கும் என்று தனக்குத் தெரியும் என்றும் கிருஷ்ணா நகரில் உள்ள தனது ENT மருத்துவமனை தனது வருகைக்காக காத்திருப்பதாகவும் கூறி அவர் கடிதம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். பாஜகவில் சீட் மறுக்கப்பட்டதால் ஹர்ஷ் வர்தன் விரக்தியில் தீவிர அரசியலில் இருந்து விலகி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து உள்ளன.
இதையும் படிங்க : மே.வங்கத்தில் பாஜக வேட்பாளர் பவன் சிங் திடீர் விலகல்! பெண்களுக்கு எதிரான சர்ச்சை பாடல் காரணமா?