டெல்லி: குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், இளங்கலை மருத்துவப் படிப்புகள் நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வினாத் தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நிலவி வரும் நிலையில், அந்த தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார்.
மேலும், நீட் தேரிவில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரி கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஏறத்தாழ 3 ஆண்டுகளாக ஒப்புதல் கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும் அதனால் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் கவலையில் உள்ளதாகவும் கூறினார்.
நீட் விலக்கு மசோதாவை பிரதமர் மோடி உடனடியாக கருத்தில் எடுத்துக் கொண்டு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று திமுக எம்பி வில்சன் மாநிலங்களவையில் பேசினார். மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் தனி ஆட்சி செய்ய முயற்சிப்பதாக திமுக எம்பி வில்சன் கூறினார்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டத்திற்கு மத்திய அரசு 31 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்றார். மேலும் வெள்ள நிவாரண நிதியாக 37 ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு கோரிய நிலையில், வெறும் 267 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், உடனடியாக மூன்றாயிரம் கோடி ரூபாயாவது பேரிடர் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று எம்பி வில்சன் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எம்பிக்கள் பதவியேற்பி விழாவை தொடர்ந்து புதிய சபாநாயகராக ஓம் பிர்லா பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரெளபடி முர்மு உரையாற்றினார். இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்பிக்கள் உரையாற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: "தமிழகத்தில் பாஜக இரண்டாவது இடம்"- பிரதமர் மோடி! - PM Modi Speech in Parliament