ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலம் பிரகாசம் வரை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தில் பயணித்த 26 வயதான பெண் பயணி ஒருவர் அவசர உதவி எண் 100க்கு அழைத்து, தன்னை பேருந்தின் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் அளித்துள்ளார்.
அதன அடிப்படையில், போலீசார் சம்பவம் நடைபெற்ற தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் பேருந்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்து ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகம் அருகே வந்து கொண்டிருந்த போது, பேருந்தை விரட்டி நிறுத்தி, பேருந்து ஓட்டுநர் சித்தையா என்பவரை கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் மற்றொரு ஓட்டுநரான கிருஷ்ணா என்பவர் குறித்து, கைது செய்யப்பட்ட ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதனிடையே, ஹைதராபாத்தில் மற்றும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது ஆண் நண்பர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் அளித்துள்ளார். அதில், தான் தனது தோழியுடன் ஹோட்டலுக்குச் சென்றதாகவும், அப்போது தனது தோழியுடன் வந்த மற்றொரு நபர் மது போதையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானா தலைநகரம் ஹைதராபாத்தில் ஒரு நாளில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதையும் படிங்க: பெண்கள் கண்ணியத்திற்கு கேடு; பிரச்சார பேச்சால் ராகுல் காந்திக்கு வந்த சோதனை.. கர்நாடகா கோர்ட்டில் மனு!