டெல்லி : எஸ்பிஐ வங்கி வழங்கிய தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. அதன்படி ரிலையன்ஸ் தொடர்புடைய குவிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 410 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி இருப்பது தெரியவந்து உள்ளது.
தேர்தல் பத்திரங்களை அதிகளவில் வாங்கிய நிறுவனங்களில் குவிக் நிறுவனம் 3வது இடத்தில் உள்ளது. கடந்த 2021 - 2022 மற்றும் 2023- 2024 நிதி ஆண்டில் 410 கோடி ரூபாய்க்கு குவிக் நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் ஆயிரத்து 368 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி அதிகளவில் தேர்தல் பத்திரம் வாங்கிய நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து உள்ளது.
அதைத் தொடர்ந்து ஐதராபாத்தை சேர்ந்த மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்ப்ரா நிறுவனம் 966 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்கி உள்ளது. மூன்றாவது இடத்தில் ரிலையன்ஸ் தொடர்புடைய குவிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 410 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி நன்கொடையாக வழங்கி உள்ளது தெரிய வந்து உள்ளது.
இருப்பினும், குவிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரிலையன்ஸ் குழுமத்தின் துணை நிறுவனம் இல்லை என ரிலையன்ஸ் குழும செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். நவி மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் குவிக் நிறுவனம், கடந்த 2000 ஆம் அண்டு நவம்பர் 9ஆம் தேதி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத இந்த நிறுவனம், 130 கோடியே 99 லட்ச ரூபாய் பங்கு முதலீட்டில் இணைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2022 -2023 நிதி ஆண்டில் இந்நிறுவனம் 500 கோடி ரூபாய் வருவாயாக ஈட்டி உள்ளது. இருப்பினும், இந்நிறுவனத்தின் நிகர லாபம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
கடந்த 2021-22 நிதி ஆண்டில் ஏறத்தாழ 360 கோடி ரூபாய்க்கு இந்நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கி நன்கொடையாக வழங்கி உள்ளது. இருப்பினும், அதே நிதி ஆண்டில் இந்நிறுவனம் 21 கோடியே 72 லட்ச ரூபாயை நிகர லாபமாக ஈட்டி உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், 2023-24 நிதி ஆண்டில் 50 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை குவிக் நிறுவனம் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தின் நீண்ட கால இயக்குநர் தபாஸ் மித்ரா உள்பட பல இயக்குநர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் என பலர் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் நேரடியாக மற்றும் துணை நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களாக காணப்படுகின்றனர். இருப்பினும் குவிக் சப்ளை நிறுவனம் ரிலையன்ஸின் துணை நிறுவனம் அல்ல என அதன் செய்தி தொடர்பாளர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 2024 மக்களவை தேர்தல் தேதி: இந்திய தேர்தல் ஆணையம் நாளை அறிவிப்பு!