திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மலை அடிவாரத்தில் ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா என்ற ஒன்று உள்ளது. இங்கு பல்வேறு வகையான வனவிலங்குகள் பரமாரிக்கப்பட்டு வருகிறது. இதனால், இங்கு திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு வருபவர்கள் மட்டுமின்றி, உயிரியல் பூங்காவை பார்வையிடவும் பலரும் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், இன்று சிங்கங்களை பராமரிக்கும் பகுதிக்குள், இளைஞர் ஒருவர் திடீரென உள்ளே குதித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிங்கம், அந்நபரின் கழுத்தில் ஆக்ரோஷமாக கடித்து உள்ளது. இதனைக் கண்ட அங்கிருந்த பலரும் கூச்சலிடவே, சிங்கம் மேலும் கோபமுற்றது. இதனிடையே, அந்நபர் அங்கிருந்த மரத்தின் மீது ஏறி தப்பிக்க முயன்று உள்ளார்.
இருப்பினும், அந்த சிங்கம் அந்நபரை கடித்து குதறி உள்ளது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பூங்கா ஊழியர்கள், வனத் துறையினர் ஆகியோர் சிங்கத்தை அடைத்து வைத்து விட்டு, உயிரிழந்த நபரை மீட்டு உள்ளனர்.
மேலும், இது தொடர்பாக திருப்பதி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சிங்கத்தில் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரகலாத் குஜ்ஜார் (34) என்பது தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து, உயிரிழந்த நபரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் ஒரு பெண் சிங்கம், 2 ஆண் சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், இதில் துங்காபூர் என்ற ஆண் சிங்கமே இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க : நெல்லை பெருமழைக்கு இதுதான் காரணமா? இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள பெருந்திட்டம்? - ஆட்சியர் சொல்வது என்ன!