பஹ்ரைச்: உத்தரப் பிரதேச மாநிலம் கோட்வாலி நன்பாரா பகுதியில் உள்ள தேஜ்பூர் தேடியா எனும் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் கோதுமையை திருடியதாக குற்றம்சாட்டி பட்டியலினத்தை சேர்ந்த மூன்று சிறுவர்களை மொட்டையடித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் சிறுவர்களின் தலையை மொட்டையடித்து திருடன் என்று தலையில் எழுதி அவமானப்படுத்தி கிராமத்தை சுற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். சிலர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்களின் குடும்பத்தினர் இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். நான்கு பேர் மீது இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மூவரை சிறைக்கு அனுப்பி உள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து பேசிய போலீசாரிடம் புகார் அளித்துள்ள கோட்வாலி நன்பரா பகுதியில் உள்ள தாஜ்பூர் தேடியா கிராமத்தை சேர்ந்த ரஜித் ராம் பாஸ்வான்,"நசீம் என்பவர் நடத்தி வரும் கோழிப்பண்ணையில் இளம் சிறுவர்கள் வேலைபார்க்கின்றனர். அவர்கள் கூறியதன்படி, நசீமும், மேலும் இருவரும் சேர்ந்து ரஜித் மற்றும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் குழந்தைகளும் கோழிப்பண்ணையில் இருந்து ஐந்து கிலோ கோதுமையை திருடி விட்டதாக கூறி அடித்து இழுத்து சென்றுள்ளனர்.
இதையும் படிங்க : நான்காவதும் பெண் குழந்தை.. தாயின் இரக்கமில்லா குணத்தில் நிகழ்ந்த கொடூரம்!
குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறுவர்களை பண்ணைக்குள் இழுத்துச் சென்று அடித்து உதைத்துள்ளனர். பின்னர் அவர்கள் தலையை மொட்டை அடித்து பெயிண்டால் தலைமீது திருடன் என்று எழுதியுள்ளனர். பின்னர் அவர்களின் முகத்தில் கருப்பு மையைப் பூசி கிராமத்தை சுற்றி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். பின்னர் முன்னாள் ஊர் தலைவர் ஷானு என்பவர்,அந்த சிறுவர்களிடம், இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் தொலைத்து விடுவோம் என்று மிரட்டியுள்ளார்,"என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய நபாரா போலீஸ் சர்க்கிள் அலுவலர் பிரதியும்னா குமார் சிங்,"இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்,"என்றார்.