சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோதாமேடு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து இன்று (டிச.09) ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; "தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் 3,000 இடங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கூடுதல் இடங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அதிகப்படியான மருத்துவ முகாம்கள் திட்டமிடப்பட்டிருந்தது.
இதில் சென்னை மாவட்டத்தில் 679 இடங்களிலும், திருவள்ளுர் மாவட்டத்தில் 200 இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 200 இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 இடங்களிலும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களில் 2,000 என்கின்ற வகையில் மொத்தம் 3,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 06.12.2023 முதல் 08.12.2023 ஆகிய 3 நாட்கள் நடைபெற்ற 2,149 முகாம்கள் நடமாடும் மருத்துவக்குழுக்களின் வாயிலாக நடத்தப்பட்டிருக்கிறது. இந்த முகாம்களின் மூலம் 1,69,421 பேர் பயன்பெற்று இருக்கின்றனர். இந்த பயனாளர்களில் 867 பேருக்கு காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் இருமல் மற்றும் சளி தொல்லை பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் 13,372 பேர், இவர்கள் அனைவருக்கும் தற்போது மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.