தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தமிழ் சினிமாவின் உதிரா பூ உதிர்ந்தது....!

காலத்தை வென்ற காவிய இயக்குநர் மகேந்திரன் தமிழ் சினிமாவை விட்டு பிரிந்து சென்றது சினிமா ரசிகர்களிடையே மனவருத்தத்தையும், வேதனையையும் அளித்துள்ளது.

இயக்குநர் மகேந்திரன்

By

Published : Apr 2, 2019, 9:04 AM IST

Updated : Apr 2, 2019, 10:06 AM IST

முள்ளும் மலரும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியவர் இயக்குநர் மகேந்திரன். இவர், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, ஜானி, நண்டு, பூட்டாத பூட்டுக்கள், மெட்டி, கை கொடுக்கும் கை, சாசனம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் கதாநாயகர்களை நம்பி இயக்குநர்கள் படங்களை இயக்கிய காலகட்டத்தில், மகேந்திரன் தனது கதையை மட்டும் நம்பி சினிமா பயணத்தை தொடங்கினார்.

அவர் இயக்கிய உதிரிப்பூக்கள் திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் மூலம் வெற்றி பெறும் படங்களின் பார்முலாவை மாற்றி அமைத்தார். யார் வெற்றி பெற்றாலும் அதில் கதை இருக்க வேண்டும், கதை இல்லாமல் நாயகன் இல்லை என்பதை நிரூபித்து காட்டினார். உதிரிப்பூக்கள் உலக சினிமா கொண்டாடும் படமாக இன்று வரை பயணிக்கிறது.

காலகட்டத்திற்கு ஏற்றார்போல் புதுப்புது இயக்குநர்கள் வந்தாலும் மகேந்திரனின் படங்களை பாடங்களாக படிக்காமல் இருக்க முடியாது. இன்றளவும் தனது கருத்தை திணிக்காமல் கதைக்காக பயணிக்கும் சினிமா இயக்குநர்கள் குறைவுதான். இயக்குநர் மகேந்திரன் நடிகர் ரஜினிகாந்திற்கு பிடித்தமான இயக்குநர் மட்டும் அல்ல நெருங்கிய நண்பரும் ஆவார்.

இவர் கடைசியாக இயக்கிய சாசனம் திரைப்படம் 2006ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து படங்கள் ஏதும் இயக்காமல் சினிமாவை விட்டு விலகியே இருந்தார்.

மேலும், விஜய் நடித்த தெறி, ரஜினி படமான பேட்ட, பூமராங், ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில், மார்ச் 27 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு டயாலிசிஸ் செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,இயக்குநர் மகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த செய்தியை அவரது மகன் ஜான் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி அறிந்த சினிமா பிரபலங்கள் பலரும் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காலத்தை வென்ற காவிய இயக்குநர் தமிழ் சினிமாவை விட்டு பிரிந்து சென்றது சினிமா ரசிகர்களிடையே மனவருத்தத்தையும் வேதனையையும் அளித்துள்ளது.

மகேந்திரனின் உடல் சென்னை கொளத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் காலை 10 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. இன்று மாலை சுமார் 5 மணி அளவில் அவரது உடல் தகனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Last Updated : Apr 2, 2019, 10:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details