காற்று மாசுபாட்டின் தீவிரம் குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து, நாட்டின் தலைநகரான டெல்லியை முன்எப்போதும் இல்லாத அளவிற்கு வருத்தத்தில் மூழ்கச் செய்தது. "டெல்லியை விட நரகம் எவ்வளவோ மேல்" என்று நீதிமன்றம் கடுமையான கருத்தை வெளிப்படுத்தி, அரசை வறுத்தெடுத்தது.
விவசாய கழிவுகளை முறையாக அகற்ற விருப்பமோ, அது எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கையோ இல்லை என்று பஞ்சாப், ஹரியானா தலைமைச் செயலாளர்களை நீதிமன்றம் கண்டித்தது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று, நீர் மாசுபாட்டிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த உச்ச நீதிமன்றம், "மாசுபாட்டின் காரணமாக மக்கள் இறக்கவேண்டுமா?" என கேள்வி எழுப்பியது. இது பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை பிரதிபலிக்கிறது.
காற்று மாசுவை கருத்தில் கொண்டு தலைநகரில் மருத்துவ அவசர நிலையை அறிவித்த கேஜ்ரிவால் அரசு, அனைத்து கட்டுமான, இடிப்பு நடவடிக்கைகளுக்கும் தடை விதித்தது. ஹிரியானா அரசும் தன் பங்கிற்கு, பயிர் கழிவுகள் அதிகம் எரிக்கப்படும் கிராமங்களை அடையாளம் கண்டு, விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்களை வாடைக்கு வழங்கியுள்ளது. அறுவடைக்கு பின் பயிர்க்கழிவுகளை உழுவதால் பலலட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பாதுகாக்கலாம் என்று விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் தோற்றுவிட்டன.
மாசுகாட்டுபாடு குறித்து டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை சந்தித்தன. இனியாவது, பெட்ரோல் போன்ற புதைபடிவ எரிபொருளுக்கு பதிலாக மாற்று எரிபொருள்களை பயன்படுதவன் சாத்தியக்கூறுகளை கண்டறிந்து, அதில் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு முக்கியக் காரணமான பயிர்க்கழிவு எரிப்பை தடை செய்ய வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) நான்கு ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டது. ஆனால் இதுகுறித்து உரிய அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பஞ்சாப், ஹரியானா அரசுகள், பயிர்க்கழிவுகளை வயல்களில் எரிக்கத் தடை விதிப்பதாக அறிவித்தாலும், உண்மையில் விவசாயிகள் அதனைத் தொடர்ந்து செய்த வண்ணமே உள்ளனர்.
ஏனெனில், இயந்திரங்கள் மூலம் டன் கணக்கில் வைக்கோல், பயிர் எச்சங்களை அகற்றுவதென்பது அவற்றின் திறனுக்கு அப்பாற்பட்டதாகும். சுற்றுச்சூழலும், தேசமும் பாதிப்படைவதை தடுக்க வேண்டுமெனில், முதல் கட்டமாக அதற்கென மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். நாட்டில் ஆண்டுதோறும் பல்லாயிரம் டன் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுகின்றன - இதில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசத்தின் பங்களிப்பு பாதிக்கும் மேலானது. எனவே, துரித நடவடிக்கைகள் இங்கிருந்து தான் தொடங்கப்பட வேண்டும்.
டெல்லியைக் காட்டிலும் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தானில் காற்று மாசுபாடு தொடர்பான இறப்புகள் அதிகம். ஹரியானா, பாக்பத், காஸியாபாத், ஹப்பூர், லக்னோ, மொராதாபாத், நொய்டா, கான்பூர், சிர்சா ஆகிய பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு டெல்லியை விட மிக மோசமாக இருந்தது. நாடு முழுவதும் உள்ள மாசு கட்டுப்பாடு வாரியங்களின் திறமையின்மையும், அங்கு நடக்கும் ஊழலையுமே இது பிரதிபலிக்கிறது.