நாட்டின் தலைநகர் டெல்லி காற்று மாசு அதிகரிப்பால் தீவிர அபாய கட்டத்தை எட்டியுள்ளது. காற்று மாசு நாளடைவில் டெல்லியை விழிபிதுங்கச் செய்துள்ளது. பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர். அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகளான வைக்கோல் உள்ளிட்டவை எரிக்கப்படுவது, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்டவைத் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மாநில நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர் மட்டக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் சி.கே.மிஸ்ரா தலைமையில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், வீட்டு வசதி மற்றும் நகர விவகாரங்கள், மின்வாரியம், வேளாண்துறை உள்ளிட்ட அமைச்சகங்களைச் சேர்ந்த மூத்த அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர். டெல்லி மாநில உள்ளாட்சித்துறை கமிஷனர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோரும் காணொலி காட்சி மூலம் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்ய இருக்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் காற்று மாசைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, காற்றின் தர அளவீட்டை கண்காணித்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரக்குறியீட்டு அளவு அபாயகரத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக டெல்லி அதனை சுற்றியுள்ள பல்வேறுப் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.