ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! - Thiruvarur news in tamil
Published : Jan 30, 2024, 12:01 PM IST
திருவாரூர்: தேசிய கல்விக் கொள்கை 2020 திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று (ஜன.29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதியில், திருவிக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசு தொடர்ந்து மாணவர்களுக்கு எதிரான கொள்கைகளை வலியுறுத்தி வருவதை எதிர்த்து, சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில், ‘தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும், தேசிய கல்விக் கொள்கை 2020 திட்டத்தை திரும்பப் பெற வேண்டும், நீட் தேர்வை (NEET EXam) ரத்து செய்ய வேண்டும், நாட்டை மதவெறி மையமாக்கும் பாஜக அரசை புறக்கணிக்க வேண்டும், இந்திய தேசத்தை பாதுகாக்க வேண்டும், நாட்டினை மதவெறி காடாக மாற்றத் துடிக்கும் பாஜக அரசுக்கு எதிராக கல்வியை பாதுகாக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.