அதிமுக வேட்பாளர் பறை அடித்து வாக்கு சேகரிப்பு.. தேர்தல் களத்தில் நடந்த சுவாரசியம்! - lok sabha election 2024
Published : Apr 15, 2024, 10:48 PM IST
கரூர்: நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார பணிகள் தமிழகம் முழுவதும் விருவிருப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக வேட்பாளர் தங்கவேலு வாக்கு சேகரிப்பின் போது தேநீர் அருந்தியும், பறை அடித்தும் வாக்கு சேகரித்தது சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக தங்கவேலு போட்டியிடுகிறார். இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரமானது கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட காணியாளம்பட்டி, வீரியாபட்டி, சுண்டுக்குளிப்பட்டி, கரட்டுப்பட்டி, காளையப்பட்டி, உடையாபட்டி, சக்கரக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிராமம், கிராமமாகப் பிரச்சார வாகனத்தில் சென்று வாக்குகள் சேகரித்தனர்.
அப்போது கரட்டுப்பட்டி கடைவீதி பகுதியில் வேட்பாளர் தங்கவேலு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் உடன் இருந்தவர்கள் அருகிலிருந்த டீ கடையில் டீ அருந்திவிட்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும் படி துண்டுப் பிரசுரம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து பறை இசை தொழிலாளர்களுடன் சேர்ந்து வேட்பாளர் தங்கவேல் பறை இசை அடித்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். இந்நிகழ்வு அப்பகுதியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.