Live: எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழா..!
Published : Jan 27, 2024, 10:52 AM IST
|Updated : Jan 27, 2024, 12:03 PM IST
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா இன்று (ஜன.27) நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்று பட்டங்களை வழங்குகிறார். மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதுச்சேரி ஜிப்மர் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டாக்டர்.ராகேஷ் அகர்வால் பட்டமளிப்பு விழா உரை வழங்குகின்றனர்.
துணைவேந்தர் பேராசிரியர் கி.நாராயணசாமி வரவேற்புரை வழங்குகிறார். இப்பட்டமளிப்பு விழாவினை முன்னிட்டு, சிறப்பு உயர்நிலை படிப்பு, ஆராய்ச்சி படிப்பு, மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த 29 ஆயிரத்து 685 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இவற்றில் 134 மாணவ, மாணவியர்களுக்கு நேரடியாகவும், 29 ஆயிரத்து 551 மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரிகள் வாயிலாகவும் பட்டங்கள் வழங்கப்படுகிறது.
இவ்விழாவில், தமிழ்நாடு ஆளுநர் 15 மாணவர்களுக்கு முனைவர் பட்டங்களும், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள 119 மாணவ, மாணவியர்களுக்கு 179 தங்கம், வெள்ளி பதக்கங்களும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கிறார்.