“கோயில்களில் இந்துக்கள் மட்டும் அனுமதிப்பது வழக்கத்தில் உள்ள மரபு” - தருமபுர ஆதீனம்! - தருமபுர ஆதீனம்
Published : Feb 3, 2024, 1:24 PM IST
தஞ்சாவூர்: தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான பிரசித்தி பெற்ற சரபேஸ்வரர் ஸ்தலமாக போற்றப்படும், திருபுவனம் கம்பகரேஸ்வர சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று (பிப்.2) நடைபெற்றது. ஆதீன குருமகா சந்நிதானம், ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தருமபுர ஆதீனத்திடம், தமிழக ஆளுநருக்கு சிறப்பு தரிசனம் வழங்கியுள்ளனர் என்ற மக்களின் புகார் குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அவர், “ கோயிலுக்குள் எத்தனை பக்தர்கள் அனுமதிக்க வேண்டும் என்ற அரசாணைபடி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேகத்தில், பக்தர்களுடன் சேர்ந்து ஆளுநர் தரிசனம் செய்தார். அவருக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்கவில்லை. ஒரு நாள் முன்னதாக நாங்கள் அழைப்பு விடுத்தோம். ஆனால், அவர் கும்பாபிஷேகம் காண வேண்டும் என்று விரும்பினார்” என்று கூறினார்.
கோயில்களில் இந்துக்கள் மட்டும் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவது குறித்த கேள்விக்கு, ஏற்கனவே வழக்கத்தில் உள்ள மரபு, இதில் புதிதாக எந்த மாற்றமும் இல்லை என்றார். அதனைத் தொடர்ந்து, ஆதீனங்களில் வடமொழி அதிகம் பயன்படுத்தப்படுவது குறித்த கேள்விக்கு, ஆகமங்கள் வடமொழியில் உள்ளதால், வடமொழி பயன்படுத்தப்படுகிறது. அதேபோன்று, தமிழில் உள்ள பன்னிரு திருமுறைகளும் பயன்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.