சென்னை: இன்றைய ஆன்லைன் யுகத்தில் அனைத்துமே விரல்நுனியில் கிடைக்கின்றன. தீர்வுகள் கிடைப்பது போன்றே பிரச்னைகளும் விரல் நுனியில் தொடங்கி விடுகின்றன. அவசர தேவைகளுக்காக நண்பர்கள், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியது போக இன்று ஆன்லைனில் கடன் வாங்குபவர்கள் தான் அதிகம். இதில் முறைப்படுத்தப்பட்ட வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் லோன் வாங்கினால் பிரச்னை இல்லை. ஆனால், முறைப்படுத்தப்படாத செயலிகளில் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினால் கூட சிக்கல்தான்.
கடன் செயலிகள் எப்படி இயங்குகின்றன? நீங்கள் வங்கிக்கடனுக்காக இணையத்தில் தேடினால், அல்காரிதம் அடிப்படையில் இந்த லோன் தொடர்பான விளம்பரங்கள் உங்களைத் தேடி வரும். சில நேரங்களில் இணையத்தில் நீங்கள் பகிர்ந்து கொண்டதன் அடிப்படையில் உங்கள் மொபைல் எண்ணுக்கே விளம்பரம் வரும். இவ்வாறு வரும் விளம்பரங்களில், அங்கீகாரம் பெற்ற செயலிகளும் இருக்கலாம், அங்கீகாரமற்ற செயலிகளும் இருக்கலாம். ஒரு வேளை நீங்கள் தவறான செயலிகளை தேர்வு செய்தால் என்ன நிகழும் என்பது கற்பனைக்கும் எட்டாதது.
உங்கள் போன் இனி உங்களுடையது இல்லை: இப்படிப்பட்ட செயலிகளை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் போதே பல்வேறு அனுமதிகளைக் கேட்கும். உங்கள் போனில் உள்ள தொலைபேசி எண்களை எடுத்துக் கொள்வது, புகைப்படங்கள் இருக்கும் கேலரிக்கான அனுமதி, எஸ்எம்எஸ் அனுமதி, கால் ரெக்கார்டு அனுமதி போன்றவற்றைக் கேட்கும். இவை எல்லாவற்றையும் கொடுத்துவிட்டால் நீங்கள் கடன் பெறும் போதே உங்கள் போனின் தகவல் முழுவதும் அவர்கள் வசம் சென்றுவிடும்.
இனி மிரட்டல் ஆரம்பம்: உதாரணத்திற்கு நீங்கள் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்குவதாக வைத்துக் கொள்வோம், இதற்கு பிராசசிங் ஃபீஸ் உட்பட பல கட்டணங்களை கழித்துக் கொண்டு ரூ.3,500 முதல் ரூ.4,000 வரை உங்கள் அக்கவுண்டிற்கு வரும். அதிகபட்சமாக கடனை திரும்பச் செலுத்த சில நாட்களே அனுமதி கொடுப்பார்கள். இந்நாட்களில் நாள்தோறும் வட்டி ஏறும். ஒரு வாரத்தின் முடிவில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை திரும்பச் செலுத்துமாறு மிரட்டுவார்கள். நீங்கள் ஏற்கனவே பணம் செலுத்தியிருந்தாலும் இதனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மிரட்டல் வரும்.
எந்த எல்லைக்கும் செல்வார்கள்: தொந்தரவு தாளாமல் நீங்கள் பதிலளிக்காமல் இருந்தால், அடுத்த கட்டமாக உங்கள் மொபைல் போனிலிருந்து ஏற்கனவே எடுத்து வைத்துள்ள தொலைபேசி எண்களுக்கு அவதூறான மெசேஜ்களை அனுப்புவார்கள். உங்கள் நண்பர்களுக்கும், அலுவலக அதிகாரிகளுக்கும், உறவினர்களுக்கும் என நூற்றுக்கணக்கில் மெசேஜ்கள் செல்லும். இதனால் பல முனைகளிலிருந்து உங்களுக்கு அழுத்தம் ஏற்படும். இதற்கெல்லாம் உச்சமாக, கேலரியிலிருந்து எடுத்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தும் மிரட்டிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.