யூடியூப் பார்த்து ‘செயின் பறிப்பு’ பாடம் படித்த இளைஞர்கள் - கையில் மாவுக்கட்டு போட்டது ஏன்? - CHENNAI CHAIN SNATCHING
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூபை பார்த்து மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைதுசெய்யும்போது தவறிவிழுந்த இளைஞர்களுக்கு கையில் முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டது.
செயின் பறிப்பு - கோப்புப் படம் (ETV Bharat TamilNadu)
சென்னை: சமூக வலைத்தள மோகம் ஆர்பரித்துக் கொண்டிருக்க, அதை சில தீய செயல்களுக்கும் சிலர் பயன்படுத்தி வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. அந்த வகையில், யூடியூபை பார்த்து எப்படி செயின் பறிப்பில் ஈடுபடுவது என்பதை தெரிந்துகொண்டு, இரு பட்டதாரி இளைஞர்கள் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த சகுந்தலா (63) என்பவர், டிசம்பர் 30ஆம் தேதி தனது பேரனுக்கு பால் பாட்டில் வாங்கிவிட்டு வீட்டின் அருகே வடுகூர் செல்வவிநாயகர் தெரு வழியாக நடந்து சென்றார்.
செயின் பறிப்பு:
அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து மூதாட்டி சகுந்தலா மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் தனிப்படை காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பதிவுகளை வைத்து இருசக்கர வாகன பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளனர். அதைவைத்து, இரு இளைஞர்களை அதிரடியாக கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
போதாத ஊதியம்:
செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது ஷேக் சிக்கந்தர் (இடது), பர்வேஸ் முஷரப் (வலது) (ETV Bharat TamilNadu)
தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியதில், இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷேக் சிக்கந்தர் (24), பர்வேஸ் முஷரப் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. பட்டதாரியான இவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி கொண்டு, வங்கியில் பணியாற்றி வந்துள்ளனர்.
குறிப்பாக, 35 ஆயிரம் ரூபாய் வரை சம்பளத்தை பெற்று வந்த இவர்களுக்கு, சில மாதங்களாக சரியான நேரத்தில் சம்பளம் வராததால் அதிக பணத்தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காக குற்றச் செயல்களில் ஈடுபட முடிவு செய்ததாக, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
யூடியூப் குற்றப்படிப்பு:
தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதால் செயின் பறிப்பில் ஈடுபட்டால், பணத் தேவையை பூர்த்தி செய்யலாம் என எண்ணி யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பார்த்து எப்படி செயின் பறிக்கலாம் எனக் கற்றுக்கொண்டுள்ளனர். இதை காவல்துறை தங்கள் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளது.
குறிப்பாக, மூதாட்டி பெண்களை மட்டுமே குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட வேண்டும் என எண்ணி கோயிலை சுற்றி சுமார் 30 நிமிடங்களாக பெண்களைத் தேடி அலைந்துள்ளனர். அப்போது தான் மூதாட்டி சகுந்தலா வந்தபோது கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் செயினை பறித்து விட்டு தப்பி ஓடியது விசாரணையில் அம்பலமானது.
கைதான இருவரிடமிருந்து மூதாட்டியிடம் இருந்து பறித்த செயினை காவல்துறையினர் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களுக்கு இதுதான் முதல் திருட்டு என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர்கள் எளிதாக சிக்கி இருந்தாலும், காவலர்கள் கையில் அகப்படாமல் தப்பிக்க முயற்சித்து தவறி விழுந்தபோது, கைதான இளைஞர்கள் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களை மருத்துவமனை அழைத்துச் சென்று மாவுகட்டு போட்ட பின்னர், காவல்துறையினர் சிறையில் அடைக்கப்பட்டனர்.