கோவை:அன்னூர் அடுத்த ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 49). இவர் இதே பகுதியில் சிவ செல்வி என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று தனலட்சுமி வழக்கம் போல விற்பனைக்காக மளிகை கடையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர் தனலட்சுமியின் மளிகை கடைக்கு வந்து பொருட்கள் வாங்குவது போல நடித்துள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் தனலட்சுமியின் கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.
இது சம்மந்தமாக தனலட்சுமி அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மேலும், மளிகை கடையில் தனலட்சுமி தன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை மர்ம நபர் அறுத்து சென்றது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில், அன்னூர் அருகே குன்னத்தூர் பகுதியில் போலீசார் தீவிர வாகனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான வகையில் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த கோவையை சேர்ந்த சேவியர் அமல்ராஜ் மகன் பிலிப் மேத்யூ (வயது 23) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் தனலட்சுமியிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் 5 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பிலிப் மேத்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:வீடியோ போடாதீங்க ப்ளீஸ்'.. ஆபாச ஆங்கரால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. யூடியூபர்ஸ் கைது..!