கன்னியாகுமரி:குழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெராபின் பிளவர் குயின்(55). இவர் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, அண்ணா பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவருடைய கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளார்.
அதனை அடுத்து, இச்சம்பவம் குறித்து கோட்டார் காவல் நிலையத்தில் ஜெராபின் பிளவர் குயின் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளையனை பிடிக்க காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில், துணை ஆய்வாளர் சரவணகுமார், காவலர்கள் விஜயகுமார், சிவக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்டமாக, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைபற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில், நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் ஆளூர் வரை சென்றது தெரியவந்துள்ளது. பின்னர், அந்த மர்ம நபர் தான் அணிந்திருந்த ஹெல்மட்டை கழற்றியுள்ளார்.
அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, பல்வேறு கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வரும் கட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்த சிவா(28) என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிவாவின் தந்தை சிவசங்கர்(55) என்பவருக்கும் இந்த நகை பறிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கும் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.