கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள எலவனூர் பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் செல்வகுமார். இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள செஞ்சேரி மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த கீர்த்தி (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு பைனான்சியர் செல்வகுமார், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் குடும்பத்துடன் தங்கி பைனான்ஸ் தொழில் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், திருமணம் ஆனது முதல் தனது மனைவி கீர்த்தி அடிக்கடி தாய் பாலாமணியை பார்க்கச் செல்வதாகக் கூறி, சென்று வந்தது செல்வகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டபோது, கீர்த்திக்கும் செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு தாய் பாலாமணியை பார்க்கச் செல்வதாகக் கூறி கரூர் மாவட்டம் எலவனூர் பகுதிக்குச் சென்ற கீர்த்தி, கணவர் செல்வகுமார் வீட்டின் பீரோவில் இருந்த பணம், நகை உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு சென்றதாக செல்வகுமாரின் தந்தை துரைசாமி தகவல் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செல்வகுமார் கீர்த்தியை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவர் அழைப்பை ஏற்காததால் சந்தேகம் அடைந்து, கீர்த்தி வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு வீட்டை காலி செய்து சென்று விட்டதாக கூறியுள்ளனர். பிறகு உறவினர்கள் வட்டாரத்தில் விசாரித்ததன் அடிப்படையில், கீர்த்தி சுல்தான்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட செஞ்சேரிமலை பகுதியில் தலைமறைவாக இருந்ததை கண்டறிந்துள்ளனர். பின்னர். கீர்த்தியை செல்வகுமார் சேர்ந்து வாழ அழைத்தும் அவர் வர மறுத்துள்ளார். பின்னர் கீர்த்தியிடம் தங்க நகை மற்றும் ரொக்கப் பணம் கேட்டதற்கு தன்னை துன்புறுத்தியதாக புகார் அளிப்பேன் என மிரட்டி உள்ளார்.
இதன் பின்னர் தான் திருமணம் மூலம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பைனான்சியர் செல்வகுமார். சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும். போலீசார் புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாகக் கூறி, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் விசாரணைக்கு ஆஜரான கீர்த்தி, தான் முதல் கணவரிடமிருந்து விவாகரத்து ஏதும் பெறவில்லை எனவும், தான் விரும்பியவர்களுடன் வாழ்வேன் எனவும் கூறியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் செல்வகுமார், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தன் புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மனு அனுப்பி உள்ளார்.
இந்நிலையில், மூன்றாவது திருமணம் செய்வதற்கு சூர்யா என்ற இளைஞருடன் கீர்த்தி தொடர்பில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இதன் பின்னரும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் செல்வகுமார், சின்னதாராபுரம் காவல் நிலையன் எல்லைக்கு உட்பட்ட அரவக்குறிச்சி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், தன்னை ஏமாற்றி நகை மற்றும் பணம் ஆகியவற்றை ஏமாற்றிச் சென்ற கீர்த்தி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது விசாரணை முடிந்து காவல்துறை கீர்த்தி மற்றும் அவரது தாய் பாலாமணி ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து, நேற்று மாலை சின்னதாபுரம் காவல்துறையினர் பாலாமணி (58), கீர்த்தி ஆகிய இருவரையும் விசாரணைக்கு சின்னதாராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, சின்னதாராபுரம் காவல் நிலையத்திலிருந்து கீர்த்தி கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக க.பரமத்தி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் கீர்த்திக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரவக்குறிச்சி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிபதி உத்தரவின்படி, கீர்த்தி திருச்சி மத்திய சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தாராபுரம் பகுதியில் பல திருமணங்கள் செய்து ஆண்களை ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்ட சில நாட்களில், மேலும் ஒரு இளம்பெண் அதே போன்ற வழக்கில் கரூரில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது! - MR Vijayabhaskar arrest