காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா முத்தியால்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த ஏரிவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மகன் கனக சபாபதி (24), எல்லை பாதுகாப்பு படை வீரராக இமாச்சல பிரதேசம் டார்ஜிலிங் பகுதியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், 40 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த கனக சபாபதி, தாம்பரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காகச் சென்றுவிட்டு நண்பர் ஆனந்தராஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளார்.
வரும் வழியில் ஊத்துக்காடு டாஸ்மாக் கடையில் மது குடிக்க நண்பர்கள் இருவரும் சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் மதுபோதை தலைக்கேறிய நிலையில், அங்கிருந்த ஒருவரை பீடி கேட்டு தாக்கியுள்ளனர். இதைக் கண்டு கோபமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், கனக சபாபதி, ஆனந்த ராஜ் இருவரையும் தாக்கியுள்ளனர்.
மேலும், கனக சபாபதியை கத்தியால் குத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இருவரும் தப்பி புத்தகரம் கூட்டு சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது கனக சபாபதிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால், நிலை தடுமாறி மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர், அந்த வழியாகச் சென்றவர்கள் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர் கனகசபாபதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வாலாஜாபாத் போலீசார், கனக சபாபதி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் அடிதடியில் ஈடுபட்டு கத்தியால் குத்திய ஆசாமிகளை தேடி வந்த நிலையில், ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (35), பழனி (40), நாயக்கன்குப்பம் பகுதியைச் சேர்ந்த அருண் (31), ராஜேஷ் (30) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், இந்தக் கொலை நடந்த டாஸ்மாக் கடையில் தினந்தோறும் அடிதடி சம்பவங்கள் நடைபெறுவதாகவும், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க:கோவையில் குழந்தைகளை விற்ற ஹோட்டல் தம்பதி.. தீவிரமாகும் வழக்கு.. ஆந்திராவுக்கு விரையும் போலீஸ்!