தமிழ்நாடு

tamil nadu

டாப் 10 செஸ் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் நுழைந்த பிரக்ஞானந்தா.. முதலமைச்சர் வாழ்த்து! - stalin appriaciate praggnanandhaa

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 3:06 PM IST

MK Stalin appriaciate Praggnanandhaa: நார்வேயில் நடைபெறும் சர்வதேச செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 கார்ல்சனை மூன்றாவது சுற்றிலும்,  உலகின் நம்பர் 2 வீரர் பேபியானோவை ஐந்தாவது சுற்றிலும் வீழ்த்தி அபாரமான சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் மற்றும் பிரக்ஞானந்தா(கோப்பு புகைப்படம்)
ஸ்டாலின் மற்றும் பிரக்ஞானந்தா(கோப்பு புகைப்படம்) (credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: சர்வதேச செஸ் தொடர் நார்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் மற்றும் இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்ளிட்ட 6 பேர் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.

மொத்தம் 10 சுற்றுகள் நடைபெறும் இந்த செஸ் தொடரில் அதிக புள்ளிகள் பெறுபவர்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுவர். முதல் சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார். 3வது சுற்றில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த உலகின் முதல் நிலை வீரரான கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். இந்த சுற்றில் வெள்ளை காய்களைக் கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற 5வது சுற்றில், உலகின் நம்பர் 2 வீரரான பேபியானோ கருவானாவை தோற்கடித்து அசத்தினார். இந்த அபாரமான வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா உலகின் தலைசிறந்த செஸ் வீரர்களுக்கான தரவரிசையில் 10வது இடத்திற்குள் முன்னேறியுள்ளார். பிரக்ஞானந்தா தன் அடுத்த போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் லிங் லிரனுடன் மோதவுள்ளார்.

இந்நிலையில், செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முற்றிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கிளாசிக்கல் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 கார்ல்சனை 3வது சுற்றிலும், உலகின் நம்பர் 2 வீரர் பேபியானோவையும் 5வது சுற்றிலும் வீழ்த்தி அபாரமான சாதனை படைத்துள்ளார். உலகின் தலைசிறந்த டாப் 10 செஸ் வீரர்களில் ஒருவராக உருவாகியுள்ள பிரக்ஞானந்தாவின் திறமையை கண்டு ஒட்டுமொத்த செஸ் உலகமே வியக்கிறது” என வாழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க: நார்வே செஸ் தொடரில் சாதித்த பிரக்ஞானந்தா, வைஷாலி.. அமைச்சர் உதயநிதி வாழ்த்து! - Praggnanandhaa

ABOUT THE AUTHOR

...view details